Published : 22 May 2023 06:10 AM
Last Updated : 22 May 2023 06:10 AM
சென்னை / திருநெல்வேலி /மதுரை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுஉள்ளார். மேலும், மதுரையைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மத்தியமாவட்ட செயலாளராக 3-வது முறையாக அப்துல் வகாப் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் நியமிக்கப்படுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார். மைதீன்கான் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘‘மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் வகாப் மாற்றப்பட்டது குறித்து திமுகவினர் கூறியதாவது:
பரபரப்பு பின்னணி தகவல்கள்: அப்துல் வகாப் தனது ஆதரவாளர்களை திருநெல்வேலி மாநகராட்சி மேயர், மாநகர திமுக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு கொண்டு வந்தார். தொடக்கத்தில் அப்துல் வகாப்,மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் இடையே சுமூகமான போக்கு இருந்தது. மாநகராட்சி பணிகளில் அப்துல்வகாப் அதிகமாக தலையிட்டதால் மேயருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் அப்துல் வகாப் ஆதரவு மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயருடன் மோதல்போக்கை கடைபிடித்தனர். மாநகராட்சி கூட்டங்களின்போது இவர்கள் வெளிப்படையாகவே மோதிக் கொண்டனர். மேயரின் ஆதரவாளரான திமுக மாநகரச் செயலாளர் தரப்பினருக்கும், அப்துல் வகாப் தரப்பினருக்கும் இடையே சமீபத்தில் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியது.
திருநெல்வேலி திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே அப்துல் வகாப் ஆதிக்கத்தால் அதிருப்தியில் இருந்த மேயர், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் ஆகியோர் ஒன்று சேர்ந்து செயல்பட தொடங்கினர். கோஷ்டி பூசல் உச்சம் தொட்டதைதொடர்ந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டி.பி.எம்.மைதீன்கான் ஏற்கெனவே மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்தவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட அப்துல் வகாப் வெற்றிபெற்றார். அதன்பின் உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த டி.பி.எம்.மைதீன்கானுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிசா பாண்டியன்.. முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன். இவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர். இவரது மனைவி பாண்டிச்செல்வி மத்திய மண்டலத் தலைவராக உள்ளார். இவருக்கும் அந்த மண்டலத்துக்கு உட்பட்ட 54-வது வார்டு திமுக கவுன்சிலர் நூர்ஜஹான் இடையே மோதல் வெடித்தது. இந்த விவகாரத்தில் பாண்டிச்செல்விக்கு ஆதரவாக அவரது கணவர் மிசா பாண்டியன், கவுன்சிலர் நூர்ஜஹானை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கவுன்சிலர் நூர்ஜஹான் மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோரிடம் மிசா பாண்டியன் மீது புகார் தெரிவித்தார்.
கவுன்சிலர் நூர்ஜஹானுக்கு ஆதரவாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், மிசா பாண்டியனை கண்டித்து நகர் பகுதியில் சுவரொட்டிகளை ஓட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இந்த நிலையில், மிசா பாண்டியனை திமுக தலைமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT