

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை முள்ளுக் குறிச்சி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரப்பன்சோலை, மெட்டாலா, பெரிய கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பெரப்பன்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பலத்த காற்று வீசியது.
இதில், பெரப்பன் சோலை, சூரியன் காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் செவ்வாழை ரக வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஒரு வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.800 வரை விலை போனநிலையில், காற்றுக்கு 2,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால், ரூ.20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்திஇழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.