அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சதாசிவத்தின் கல்விச் சேவை போற்றுதலுக்குரியது: துணைவேந்தர் வேல்ராஜ் புகழாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எம்.சதாசிவம் 90-வது பிறந்தநாள் விழாவில் பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் விழா மலரை வெளியிட்டு, பேராசிரியர் சதாசிவத்துக்கு நினைவுப் பரிசு வழங்கினார். உடன் பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், கிண்டி பொறியியல்கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.சேகர். படம்: எஸ்.சத்தியசீலன்
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எம்.சதாசிவம் 90-வது பிறந்தநாள் விழாவில் பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் விழா மலரை வெளியிட்டு, பேராசிரியர் சதாசிவத்துக்கு நினைவுப் பரிசு வழங்கினார். உடன் பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், கிண்டி பொறியியல்கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.சேகர். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சதாசிவத்தின் கல்விச் சேவை போற்றுதலுக்குரியது என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எம்.சதாசிவத்தின் 90-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை கிண்டியில் பல்கலை. வளாகத்தில் உள்ள டேக் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கட்டிடக்கலைத் துறையின் முன்னாள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து பேராசிரியர் சதாசிவத்துக்கு நினைவுப் பரிசு, பாராட்டு மடல்கள் வழங்கப்பட்டன.

விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: பேராசிரியர் சதாசிவத்துடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தான் படித்த பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் முதல் மாணவனாக அவர் இருந்திருக்கிறார். இதன் மூலமாக அவர் இளம் வயதில் எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்திருப்பார் என்பதை நம்மால் அறிய முடியும்.

கல்விக்கு மட்டுமின்றி அது சார்ந்த சமூகப் பணிகளுக்கும் சதாசிவம் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். இவை எல்லாவற்றையும் தாண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு, அவரது பங்களிப்பும் முக்கிய காரணமாகும்.

குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலையுணர்வு ஆராய்ச்சி மையமும் அதற்கு சான்றாகும். அவர் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அத்தகையவர்களுக்கு சிறந்த சமூகத்தை உருவாக்குவதைத் தவிர்த்து வேறு மறைமுக நோக்கம் இருப்பதில்லை.

அந்த நோக்கத்துக்கு நல்ல முறையில் செயல் வடிவம் கொடுத்துள்ளார். அவரிடம் படித்த பலரும் தற்போது சிறந்து விளங்குகின்றனர். அவர் ஆற்றிய பங்களிப்புக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் கல்விச் சேவையானது என்றைக்கும் போற்றுதலுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

விழா இறுதியில் தனது ஏற்புரையில் பேராசிரியர் சதாசிவம் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் அண்ணா பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எம்.சேகர், பேராசிரியர் சதாசிவத்தின் குடும்பத்தினர், முன்னாள் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in