Published : 22 May 2023 06:17 AM
Last Updated : 22 May 2023 06:17 AM

தமிழகத்தில் 33 சதவீதம் பரப்பளவுக்கு பசுமை போர்வை உருவாக்குவதே இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தில் 33 சதவீதம் பசுமை போர்வையை உருவாக்குவதே அரசின் இலக்கு என்று சென்னை பெசன்ட்நகரில் நேற்று நடைபெற்ற கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, ஜி-20 மாபெரும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்றது.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்று கடற்கரையில் உள்ள குப்பைகளை சேகரித்து அகற்றினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிளாஸ்டிக் பொருட்கள் பலஆண்டுகள் ஆனாலும் மக்காததன்மை கொண்டதாக, கடல்வாழ்உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக, மண்ணை மலடாக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அதுபோன்றபிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை கடற்கரையில் போடக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இன்று குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு நாட்டிலும் 30 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் பசுமை பரப்பு 30 ஆயிரத்து 842.22 சதுர கிமீ அளவில்தான் இருக்கிறது.

மேலும் 12 ஆயிரத்து 76 சதுர கிமீ பரப்பில் பசுமை போர்வையை உருவாக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இதை இந்த அரசு புனிதக் கடமையாகவே ஏற்று, 33 சதவீதம் பசுமை பரப்பு என்ற இலக்கை எட்டும் வகையில் கோடிக்கணக்கான மரங்களை நடும் பணிகளை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சியின் நவீன டிஜிட்டல் பிரச்சார வாகனம் பெசன்ட்நகர் கடற்கரையில் நிறுத்தப்பட்டு, குப்பைகளை வகை பிரித்து வழங்குவதன் அவசியம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு காணொலி காட்சி திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x