Published : 22 May 2023 06:26 AM
Last Updated : 22 May 2023 06:26 AM

தமிழகத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்களின் சிறுநீரக பாதிப்புகளை அறிவதற்கான ஆய்வு ஓரிரு வாரங்களில் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்களின் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகளை அறிவதற்கான ஆய்வு ஓரிரு வாரங்களில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.

தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்று துறை இணைந்து கடந்த ஆண்டில் இந்த ஆய்வை தொடங்கியன. பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் 500 பேர் தமிழகம் முழுவதும் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

சுமார் 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பொது சுகாதாரத் துறையில் பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதில், இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அமைப்பு சாரா பணியாளர்கள்: அவர்களில், பெரும்பாலானோர் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாராபணிகளில் ஈடுபடுபவர்களாகவும், 60 சதவீதம் பேர் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இதையடுத்து விவசாயப் பணிகளில் ஈடுபடுவோரின் சிறுநீரக செயல்திறனை அறிவதற்கான ஆய்வை முன்னெடுக்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ஆய்வுப் பணி தொடங்கவுள்ளது. ஆய்வக நுட்பநர்கள், மருத்துவக் களப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. பொது சுகாதாரத் துறை களப் பணியாளர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வெயிலில் நேரடியாக அதிக நேரம் பணியாற்றுவது, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து கையாளுவது, அவர்களது சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமா என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடியுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x