Published : 22 May 2023 06:37 AM
Last Updated : 22 May 2023 06:37 AM

தமிழக சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு: அமைச்சர் கா.ராமச்சந்திரன் பெருமிதம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகள், வாகன நிறுத்தும் மையங்களை ஆய்வு செய்கிறார் அமைச்சர் கா.ராமச்சந்திரன், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா.

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் உணவகம், தங்கும் விடுதி அறைகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி ஆகியவற்றை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனாவுக்கு பிறகு தமிழகம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ல் 56,622 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 4 லட்சத்து 7,139 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 2023-ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் மட்டும் 2 லட்சத்து 67,773 ஆக உள்ளது.

இதேபோல உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2021-ல் 11 கோடியே 53 லட்சத்து 35,719 ஆக இருந்த நிலையில் 2022-ல் 21 கோடியே 85 லட்சத்து 84,846 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 2023-ல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் 6 கோடியே 64 லட்சத்து 90,154 பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர்.

மேலும் சுற்றுலாத் துறை மூலம் உணவு விடுதிகள், சுற்றுலாப் பயணத் திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கி வருகிறோம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நேரடியாக நிர்வகித்து வருகிறது.

ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர்,ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உட்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நகரின் மையப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த தங்கும் விடுதிகளில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மொத்தமாக அனைத்து அறைகளையும் பதிவு செய்பவர்களுக்கும் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தங்குபவர்களுக்கும், வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் 3 நாட்கள் தங்குபவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான ஓட்டலையும், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் மற்றும் கோயில்களில் இருக்கும் ஓட்டல்களையும் ஆய்வு செய்துள்ளேன். இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x