Published : 22 May 2023 06:44 AM
Last Updated : 22 May 2023 06:44 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி தொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜிஸ் சார்பில் உயர் தொழில்நுட்ப பிரிவுகளுக்கான பணிமனை கட்டுமான பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 40-ல் நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டம் ரூ.2,877.43 கோடியில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. 5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் வரும் ஆக.1 முதல் பயிற்சி தொடங்கவுள்ளது.
இத்திட்டத்துக்கான பணிமனை கட்டிடங்கள் அமைக்க ஒவ்வொரு நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் ரூ.31.00 கோடி செலவில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளதை கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலர் முகமது நசீமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் கொ. வீரராகவராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உடனிருந்தனர்.
இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவுறும் தறுவாயில் உள்ளதாகவும், செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முடிவு பெற்று தொடக்க விழாவுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30-க்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT