Published : 22 May 2023 06:28 AM
Last Updated : 22 May 2023 06:28 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினம் அனுசரிப்பு: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு  பெரும்புதூர் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் மற்றும் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம்தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது 32-வது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளஅவரது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, ராஜீவ் காந்தி படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் நினைவு ஜோதியை, கே.எஸ்.அழகிரியிடம் வழங்கினார்.

தொடர்ந்து, சென்னை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியிலும் ராஜீவ் காந்தி படத்துக்கு கே.எஸ்.அழகிரிமலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் காங்கிரஸார் உயிரை இழந்தனர். அதனால்தான் இன்றும் காங்கிரஸ் நிலைத்து நிற்கிறது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் கனவை நனவாக்கினார் ராஜீவ்காந்தி. தமிழரை முதல்வராக்கினார். இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றினார். அவர் நினைவு நாளில் இதையெல்லாம் நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துகிறோம்.

பிரதமர் மோடி துக்ளக் தர்பார் நடத்தி வருகிறார். இப்போது ரூ.2 ஆயிரம் நோட்டையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தநோட்டை எதற்காக கொண்டுவந்தார்கள், எதற்காக திரும்பப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில், காங்கிரஸ்முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, தேசிய செயலர் சிரிவெல்ல பிரசாத்,சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாநிலதுணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x