Published : 22 May 2023 06:25 AM
Last Updated : 22 May 2023 06:25 AM

சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணி: தலா ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிக்கு தலா ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் விதமாக, முகப்புப்பகுதி மேம்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், உலகத் தரத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை: இத்திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் அம்பத்தூர், அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை கடற்கரை, கூடுவாஞ்சேரி, கிண்டி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, மாம்பலம், பூங்கா நிலையம், பெரம்பூர், பரங்கிமலை, சூலூர்பேட்டை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த நிலையங்களை மறுசீரமைப்பு

பணி மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தற்போது, ஒப்பந்தப்பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு நிலையம் மறுசீரமைப்பு செய்ய ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ், 15 நிலையங்களில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். இதற்காக, ரயில் நிலையங்களின் வரைவு மாதிரி தயார் செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், நிலையத்தின் முகப்புமற்றும் நுழைவு பகுதியில் கட்டிட வடிவமைப்பு பிரம்மாண்டமாக இருக்கும். இதுதவிர, ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்படும். நிலையங்கள் சீரமைப்புபணிக்கு தலா ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட பணிகள்: முதல்கட்ட பணிகள் 2023-24-ம்நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் கழிப்பறைகள், ரயில் நிலைய முகப்பு, நுழைவாயில், மின்தூக்கிகள், நகரும்படிக்கட்டுகள், தரமான நாற்காலிகள், அகலமான நடைபாலங்கள் உட்பட பல வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்தகட்டமாக, 15 நிலையங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x