Published : 22 May 2023 06:13 AM
Last Updated : 22 May 2023 06:13 AM
சென்னை: போலியான நிலையாணை மூலம் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கத்தினர் அனுப்பிய புகார் மனு குறித்து மே 31-ம் தேதி தொழிலாளர் நலத்துறை விசாரணை நடத்தவுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பணியாளர்கள் நலச் சங்கத்தினர், தொழிலாளர் துறைக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம் (சென்னை) என்ற நிறுவனத்தில் கடைப்பிடிக்கும் நிலையாணை, சென்னை பல்லவன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் என்ற பெயரில் கடந்த 1978 ஜூன் 27-ம் தேதியில் சென்னையில் சான்றளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநிலையாணை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் சான்றளித்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. இதன் மூலம் சான்றொப்பம் பெறப்படாத போலி நிலையாணை பயன்படுத்தப்படுகிறது என தெளிவாகிறது. எனவே, போலி நிலையாணையை பயன்படுத்தும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநருக்கு அபராதம், தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் தொழிற்சங்கத் தரப்புக்கு அழைப்பு விடுத்து, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அனுப்பிய கடிதத்தில், "புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு வரும் 31-ம்தேதி காலை 11.30 மணிக்கு இவ்வலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் ஆஜராக வேண்டும். மேலும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சான்றிடப்பட்ட நிலையாணைகள் பெறப்பட்டிருப்பின், அதன் விவரத்தையும், நகலையும் சமர்ப்பிக்கவேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலையாணை அடிப்படையில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT