

மதுரை: கால அவகாசம் கொடுத்திருப்பதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவதில் பிரச்சினை ஏதும் இல்லை, என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி 72-வது வார்டு பைக்காரா மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வேலம்மாள் மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.53 லட்சத்தில் கட்டிய கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் நாளை (இன்று) ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு 3 மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளனர். பணப் பரிமாற்றத்தைப் பொருத்தவரையில் திடீரென்று தடை விதிப்பதும், கால அவகாசம் வழங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. அதனால், ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றுவதில் பிரச்சினை ஏதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.