

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராம்கி என்பவர் ரூ.130 மதிப்புள்ள மதுபாட்டிலை கேட்டார். விற்பனையாளர் ரூ.140 வாங்கிக்கொண்டு மதுபாட்டிலை கொடுத்தார். அப்போது ராம்கி மதுபாட்டிலை பார்த்தபோது இறந்த நிலையில் பல்லி மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ராம்கி, சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் இதுபற்றி கேட்டபோது விற்பனையாளர் மழுப்பலாக பதில் அளித்துவிட்டு, வேறு மதுபாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினார். அதை ஏற்க மறுத்த ராம்கி, பல்லி விழுந்த மதுபாட்டிலை தரமறுத்துள்ளார்.
மேலும், தரமில்லாத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், பல்லி இறந்து கிடக்கும் மதுபாட்டிலை தெரியாமல் குடித்து நான் இறந்திருந்தால் எனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் எனவும், பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வீதம் விலையை விட அதிகமாக விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மதுபாட்டிலில் பல்லி செத்து கிடந்த சம்பவத்தால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு குவிந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.