

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முதன்முதலில் துரோகம் செய்தது அதிமுக ஆட்சிதான் என்று திமுக சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்த பிறகு நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
பேரவையில் கேள்வி நேரத்தை பாதியில் முடித்துவிட்டு, முதல்வர் அவசரமாக 110-வது விதியின்கீழ் அறிக்கை படித்தார். அவர் படித்து முடித்ததும் வழக்கம்போல் இது பெரிய சாதனை என பல கட்சியினர் பாராட்டினர். திமுக சார்பில் நான் பேசும்போது, ‘‘36 ஆண்டுகளாக நடந்த இந்தப் பிரச்சினைக்கு ஒருவர் மட்டும் பாடுபடவில்லை. விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கு உண்டு. எங்கள் தலைவர் கருணாநிதியும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று கூறினேன். அதை ஏற்க மறுத்து குரல் கொடுத்தனர். ஆரம்பத்தில் ஒரு கமிட்டி போட்டு, தீர்ப்பை ஏற்று மூவர் குழு அமைக்கப்பட்டதே, அதற்கு அடித்தளமாக இருந்ததே கருணாநிதிதான்.
1979-ல் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தது அதிமுக அரசு தான். அணை பலமாக இருந்த நிலையில், பலவீனமாக இருப்ப தாக சில பத்திரிகைகள் எழுதின. பின்னர், திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், பொறியாளர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபிறகு, அணை நீர்மட்டத்தை152 அடியில் இருந்து 136 அடிக்கு குறையுங்கள் என்று கேரளா தரப்பில் கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழகத்தில் விவாதிக்கப்படவில்லை. நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துவிட்டனர். இந்த முதல் துரோகத்தை செய்தது அதிமுகதான்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் எல்லாமே செய்தது கருணாநிதிதான். ஆனால், இப்போது தீர்ப்பு வருகிறபோது, அறுவடை செய்தவர்தான் இப்போதுள்ள முதல்வர். இந்த விளக்கத்தை பேரவையில் சொல்ல முயன்றேன். வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் துரைமுருகன்.