

தேவகோட்டை: தேவகோட்டையில் ஸ்கூட்டர் ‘ஆக்சிலேட்டரை குழந்தை திருகியதால், துணிக்கடைக்குள் வாகனம் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் தாய், மகள் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே ஊனியூரைச் சேர்ந்த அற்புதராஜ் மனைவி கவுசல்யா (26). இவர் தனது 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் தேவகோட்டைக்குச் சென்றார்.
அங்கு திருப்பத்தூர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டு புறப்பட்டபோது, வாகனத்தின் முன்புறம் நின்று கொண்டிருந்த குழந்தை திடீரென ஆக்சிலேட்டரை திருகியது. இதில் ஸ்கூட்டர் அதிவேகத்தில் சென்று, அங்கிருந்த துணிக்கடை யின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நுழைந்தது.
வாகனம் மேஜையில் மோதி சரிந்து விழுந்ததில் கவுசல்யாவும், அவரது மகளும் காயமடைந்தனர். கடை ஊழியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.