Last Updated : 03 Oct, 2017 09:21 AM

 

Published : 03 Oct 2017 09:21 AM
Last Updated : 03 Oct 2017 09:21 AM

காற்று மாசு ஏற்படுவது தடுக்கப்படுவதால் நெல் அரவை ஆலைகளில் காஸ் சிலிண்டர் பயன்பாடு: தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ஐஓசி திட்டம்

காற்று மாசு, உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க நெல் அரவை ஆலைகளுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட நெல் அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நெல்லை தண்ணீரில் வேகவைத்து, நீராவியில் உலர வைப்பதற்கு விறகு மற்றும் உமியை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு உமியை எரிக்கும்போது உண்டாகும் புகையால் காற்று மாசடைந்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இதுதவிர, உமியை எரித்தபின் கிடைக்கும் சாம்பலாலும் மாசு ஏற்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் விதமாக நாட்டிலேயே முதல் முறையாக சீர்காழி அருகே உள்ள திருக்கருகாவூரில் உள்ள ஒரு நெல் அரவை ஆலையில் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் நடைமுறையை கடந்த ஜூலை மாதம் இந்தியன் ஆயில் நிறுவனம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தைக் கொண்டு செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து இண்டேன் காஸ் திருச்சி மண்டல மேலாளர் ரவிசங்கர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நெல் அரவை ஆலைகளில் விறகு மற்றும் உமியை எரிபொருளாக பயன்படுத்தும்போது தொடர்ச்சியாக சரியான அளவில் சூடு இருக்க வேண்டும் என்பதால் அதை ஒருவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும்போது அவ்வாறு தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதில்லை. இதனால், அரிசி உடைபடும் வீதம் பெருமளவில் குறைகிறது.

மேலும், சுற்றுவட்டாரப்பகுதியில் ஏற்படும் காற்று மாசு முற்றிலுமாக தடுக்கப்படுவதோடு, ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலன் பாதுகாக்கப்படுகிறது. விறகை எரித்தபிறகு அதன் மூலம் கிடைக்கும் சாம்பலை அப்புறப்படுத்துவது என்பது அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. ஆனால், எரிவாயுவை பயன்படுத்தும்போது சாம்பல் வெளியாவது தடுக்கப்படுகிறது.

தற்போது சீர்காழி, சின்ன சேலம், காங்கேயம் ஆகிய இடங்களில் உள்ள 5 ஆலைகளில் காஸ் சிலிண்டரை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 3 ஆலை கள் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி இயங்க ஆரம்பித்துவிட்டன. 2 ஆலைகள் நெல்லுக்காக காத்திருக்கின்றன.

பண்ருட்டி, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் 5 ஆலைகளை இயக்க தற்போது வேலைகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். எனவே, விருப்பமுள்ள ஆலை உரிமையாளர்கள் 9443389141 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

நெல் அரவை ஆலைகளுக்கு காஸ் சிலிண்டர்களை விநியோகிக்கும் முகவர் எம்.அரவிந்த் கூறும்போது, “முன்பு நீராவியை பயன்படுத்தி நெல்லை உலரவைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 500 முதல் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த வேலைக்கு எரிவாயுவை பயன்படுத்தும்போது தண்ணீர் தேவையில்லை என்பதால் தண்ணீர் மிச்சமாகும். நெல்லை உலர வைப்பதற்காகன நேரம் குறைவதால், மின்சார செலவும் குறையும். அதோடு ஒவ்வொரு ஆலையிலும் ஒரு நாளைக்கு 2 டன் அளவுக்கு விறகை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது எரியாவு பயன்படுத்தப்படுவதால் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும்.

செலவு எவ்வளவு?

நெல் அரவை ஆலைகளில் விறகு மற்றும் உமியை எரிபொருளாக பயன்படுத்துவாதால் ஏற்படும் அதே செலவுதான் எரிவாயுவை பயன்படுத்தும்போதும் ஏற்படும். ஆனால், எரிவாயுவை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்கள் அதிகம். எனவேதான், தற்போது திருவண்ணாமலை, மண்ணச்சநல்லூர், புதுவயல் உள்ளிட்ட இடங்களில் இருந்து நெல் அரவை ஆலை உரிமையாளர்களை எரிவாயுவை பயன்படுத்துவதற்கு கேட்டு வருகின்றனர். ஒரு நெல் அரவை ஆலையில் எரிவாயுவை பயன்படுத்த தேவையான உபகரணங்களை பொருத்த ரூ.3 முதல் ரூ.5 லட்சம் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x