

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள சிக்னலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் போக்குவரத்துக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்பட்சத்தில், மற்ற சிக்னல்களிலும் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சியில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், பெரும்பாலான சிக்னல்களில் ஒரு நிமிடம் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, அவர்களது சிரமத்தை போக்கும் வகையில் சோதனை முயற்சியாக, திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில்(கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து வாகனங்கள் வரும் பகுதியில்) மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறை சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அனாவசியமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
பகல் நேரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் வெயிலில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், தற்போது தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள சிக்னலில் ஒரு பகுதியில் மட்டும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும்பட்சத்தில், மாநகர காவல் துறையின் உதவியுடன், பிற முக்கிய சிக்னல்களிலும் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் ராகேஷ் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இந்த புதிய முயற்சி வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இதை மற்ற சிக்னல்களுக்கும் விரிவுபடுத்தினால் மிகவும் மகிழ்ச்சியளிக்கும். மேலும், இதை நிரந்தர பந்தலாக அமைத்தால், கோடை காலத்தில் மட்டுமில்லாது மழை காலத்திலும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.