காசோலை அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தவறில்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

காசோலை அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தவறில்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மதுரை: ஊராட்சித் தலைவர், துணைத் தலைவரிடையே மோதல் போக்கு நீடிப்பதால் ஊராட்சித் தலைவரின் காசோலை அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு சரிதான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம் பாட்டக்குறிச்சி ஊராட்சித் தலைவர் அன்னலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: பாட்டக்குறிச்சி ஊராட்சி துணைத் தலைவர் முருகேசன் ஊராட்சிப் பணிகளைச் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். ஊராட்சி காசோலை மற்றும் கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். இதனால் ஊராட்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஊராட்சி காசோலையில் கையெழுத்திடும் ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தை பறித்து, அதை தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து அளித்த தீர்ப்பு: ஊராட்சித் தலைவரும், துணைத் தலைவரும் உறவினர்கள். தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கிராமத்தினரின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். கிராமத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காததால் ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

ஊராட்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. தலைவரும் துணைத்தலைவரும் தொடர்ந்து பகை உணர்வுடனேயே இருந்துள்ளனர். இதை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in