கோவையில் அனுமதிக்கப்பட்ட 16 இடங்களில் சாலை அமைக்காமல் பணம் பெற்ற விவகாரம் - ஆய்வு செய்ய வலியுறுத்தல்

கோவையில் அனுமதிக்கப்பட்ட 16 இடங்களில் சாலை அமைக்காமல் பணம் பெற்ற விவகாரம் - ஆய்வு செய்ய வலியுறுத்தல்
Updated on
2 min read

கோவை: கோவை மாநகரில் கடந்த 2019-20-ம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன. இதில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் சாலைகள் அமைக்காமல் ரூ.1.82 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் கூறியதாவது: கடந்த 2016-2021-ம் ஆண்டு காலகட்டத்தில் புதியதாக போடப்பட்ட சாலைகள், புதுப்பிக்கப்பட்ட சாலைகளின் விவரங்களை தகவல் அறியும் சட்டம் மூலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன். அதற்கு, மத்திய மண்டலத்தை தவிர, மற்ற மண்டலங்களில் பதில் தரப்பட்டது.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மண்டலங்களில் மொத்தம் ரூ.280 கோடி மதிப்பில் 552 கிலோ மீட்டர் தூரத்துக்கு 380 சாலைகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆய்வு செய்த போது, வடக்கு மண்டலத்தின் பழைய 38, 39, 40, 44-வது வார்டுகளில் மொத்தம் 16 சாலைகள் 2019-20-ம் ஆண்டில் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

44-வது வார்டு புதுத்தோட்டம் 2-வது வீதி, மருதம் நகர், அன்னையப்பன் 5-வது வீதி, அமிர்தா அவென்யூ பேஸ் 2, சங்கனூர் லட்சுமி நகர் மற்றும் பாலாஜி நகர் 3-வது வீதி, 38-வது வார்டில் நீம் லேன்ட் முதல் வீதி, செங்காளியப்பன் நகர், பயனீர் மில் சாலை, 39-வது வார்டில் பிஆர்பி கார்டன் பார்க் ரோடு, ஜெகநாதபுரம் மெயின் ரோடு, குலாலர் வீதி, டிஸ்பென்சரி சாலை, 40-வது வார்டு இளங்கோ நகர், தெற்கு வீதி, ஜி.டி.காலனி ஆகிய 16 இடங்களில் நான் நேரடி கள ஆய்வு செய்த போது, அங்கு சாலைகள் அமைத்தே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது தெரியவந்தது.

ஆனால் அளவீட்டு புத்தகத்தில் சாலை அமைத்ததற்காக ரூ.1.82 கோடியை ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் கசிந்தவுடன், அனுமதி பெற்ற இடங்களுக்கு பதிலாக வேறு 9 இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டதாக, தொடர்புடையதாக அதிகாரிகள் ஆணையரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு பதில் வேறு இடத்தில் சாலை அமைக்கப்பட வில்லை. அதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. சாலை அமைக்காமலே அமைக்கப்பட்டதாக கூறி தொகையை கையாடல் செய்தது தான் உண்மை.

இது தொடர்பாக ஆணையர் விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019-20 காலகட்டத்தில் போடப்பட்ட மீதமுள்ள அனைத்து சாலைகளையும் குழு அமைத்து கள ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘இவ்விவகாரம் தொடர்பாக 3 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் அமைக்க வேண்டிய சாலையை மற்றொரு இடத்தில் அமைத்துவிட்டனர். இவ்வாறு இடத்தை மாற்றி சாலை அமைக்க, அதிகாரிகள் அரசிடம் நிர்வாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பெறவில்லை. சாலையே அமைக்காமல் தொகை கையாடல் செய்திருந்தால் அதுதொடர்பாக கிரிமினல் புகார் அளிக்கப்படும். ஆனால், இங்கு நடந்தது நடைமுறை விதிமீறல் தான். எனவே, இதில் தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அமைக்கப்பட்ட சாலைகளை முழுவதுமாக தற்போது கள ஆய்வு செய்ய முடியுமா என பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in