Published : 27 Oct 2017 09:51 AM
Last Updated : 27 Oct 2017 09:51 AM

40% ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணிகள் பாதிப்பு: காலியிடம் நிரப்பக் கோரி 18-ல் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இதுதவிர, 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர்.

வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், ஆம்னி பஸ்கள் ஆய்வு நடத்துதல், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களில் சோதனைப் பணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், மோட்டார் வாகன ஆய்வாளர், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ஒன்றிப்பு மாநில தலைவர் சுரேஷ்பாபு, சட்ட ஆலோசகர் கு.பால்பாண்டியன் ஆகியோர் கூறும்போது, ‘‘போக்குவரத்துத் துறை ஆணையரகத்தின்கீழ் செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், போதிய அளவில் ஆட்கள் நியமிக்கப்படாததால், இருக்கும் ஊழியர்களுக்கு பணி பளு அதிகரித்துள்ளது.

எனவே, இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், வாகன ஆய்வாளர் உட்பட பல்வேறு பிரிவுகளில் சுமார் 500 இடங்கள் என 40% காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நவ. 18-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x