

சென்னை: ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விசிக தலைவர் திருமாவளவன்: மத்திய அரசின் கோமாளித்தனம் மீண்டும் அரங்கேறியுள்ளது. ஏழைகளிடம் புழக்கமில்லாத பணம்தான் எனினும், இது மதிப்பிழக்கிறபோது அனைத்துத் தரப்பிலும் அதன் பாதிப்பு ஏற்படும். பொருளாதார நிலைத் தன்மையும் பாதிக்கப்படும். அரசியல் எதிரிகளை நிலைகுலைய வைப்பதற்கான தந்திரமாக பிரதமர் மோடி இதைக் கருதலாம். ஆனால் இது மக்களுக்கு எதிரான நடவடிக்கை.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கிவைத்து, வரி ஏய்ப்பு செய்துவாழ்க்கை வாழ்பவர்களுக்கு இதுபாதகம். ஆனால், சாமானியர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுபோன்ற நல்ல நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: எவ்வித முன்யோசனையும் இன்றி கடந்த 2016-ல் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் கறுப்புப்பணம் ஒழிக்கப்படும், கள்ளப்பணம் அழிக்கப்படும் என்று வாய்ச் சவடால் அடித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது மீண்டும் அதேபோல அறிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாஜக அரசு படுதோல்வி அடைந்திருப்பதற்கு இந்த அறிவிப்பு ஒப்புதல் வாக்கு மூலமாக அமைந்துள்ளது.
தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்: ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதின் உண்மையான நோக்கம் ரூ.2 ஆயிரம் பணத்தாளில் கள்ளநோட்டு புழக்கம் அளவுகடந்து விட்டது என்பதே. ரிசர்வ் வங்கியின்அறிவிப்பு பொருளியலைச் சீர்படுத்த எந்த வகையிலும் உதவப் போவதில்லை. மாறாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றவும் மட்டுமே பயன்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.