

சென்னை: கோடைகாலத்தில் பயணிகள் வசதிக்காக, 244 ரயில் சேவைகளுடன் 50 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. மேலும், பயணிகள் தேவைக்கு ஏற்ப, சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கோடைகாலம் நிலவுவதால், சுற்றுலா தலங்கள் மற்றும் சொந்தஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களில் நெரிசலைக் குறைக்கவும் 50 சிறப்பு ரயில்கள், பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 244 ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன.
தாம்பரம் - திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கும், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் வேளங்கண்ணி, திருவனந்தபுரம் - மங்களூரு, கொச்சுவேலி - எஸ்எம்விடி பெங்களூரு என பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு இடங்களுக்கு, 17 கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று பிற ரயில்வே மண்டலங்கள் அறிவித்துள்ளன.
குறிப்பாக, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, வேளாங்கண்ணி மற்றும் மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 526 சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மலை வாசஸ்தலங்களான உதகை, குன்னூருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, வழக்கமான சேவைகள் மட்டுமின்றி, நீலகிரி மலை ரயிலில் கோடைகால (முன்பதிவு) சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
அதேபோல, வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியலைத் குறைக்கும் வகையில், கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோடைகாலத்தில் ரயில்களில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, காத்திருப்போர் பட்டியல் அதிகமுள்ள முக்கிய விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
நாட்டில் 380 சிறப்பு ரயில்கள் மூலமாக 6,369 சேவைகள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் பயணிகள் தேவையைப் பூர்த்திசெய்வதில் முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது. பயணிகள் தேவைக்கு ஏற்ப, கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.