Published : 21 May 2023 10:26 AM
Last Updated : 21 May 2023 10:26 AM

சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த கூலி தொழிலாளிக்கு ஐகோர்ட் உத்தரவின் பேரில் அரசு வேலை - 32 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு

சென்னை: சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த மண்பாண்ட கூலித் தொழிலாளிக்கு 32 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி பி.எஸ்.லோகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘எனக்குத் திருமணமாகி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். எனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

சேலத்தில் உருக்காலை அமைப்பதற்காக, எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் 80 சென்ட் நிலம் கடந்த 1991-ம் ஆண்டு அரசால் கையகப்படுத்தப் பட்டது. அப்போது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் கழிந்தும் சேலம் இரும்பாலை நிறுவனத்தில் எனக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அறநிலையத் துறையில் வேலை வழங்குமாறு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக காவலாளி வேலை வழங்கப்படும் என்று கூறி ஆணையிட்டுள்ளார். ஏற்கெனவே எங்களது 4 ஏக்கர் 80 சென்ட் நிலம் தற்போது சேலம் உருக்காலைக்கு வெளியே, உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, எனக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். அல்லது எங்களது நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.பிரபாவதி, எம்.தமிழவேல் ஆகியோர் ஆஜராகி, "ஏழ்மை நிலையில் உள்ள மனுதாரர் தனது நிலத்தை வழங்கிவிட்டு, அரசு வேலைக்காக கடந்த 32 ஆண்டுகளாக சட்ட ரீதியாகப் போராடி வருகிறார்" என வாதிட்டனர்.

நீதிபதியும், அரசு வேலை வழங்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து, மனுதாரருக்கு சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஆணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x