Published : 06 Oct 2017 08:08 AM
Last Updated : 06 Oct 2017 08:08 AM

அக்.20-ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: மீட்பு, நிவாரண பணிகளுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு - பேரிடர் மீட்பு பணிக்காக 6,740 பெண்கள் சேர்ப்பு; அமைச்சர் உதயகுமார் தகவல்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளம், கடந்த ஆண்டு ஏற்பட்ட வார்தா புயல் ஆகியவற்றால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன்படி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த் துறை செயலர் பி.சந்திரமோகன், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. மொத்தமுள்ள 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில், 115 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளன. சமூக நலக்கூடங்களாக செயல்படும் பல்நோக்கு மையங்களில் சமையலறைகள் கூடுதலாக கட்டப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள 3,172 பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை உருவாக்குதல், பயிற்சி அளித்தல், உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-வது பட்டாலியன் பிரிவில் உள்ள ஆயிரம் பேரை கொண்டு இப்படை உருவாக்கப்படுகிறது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். பேரிடர் காலங்களில் சமுதாய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, கிராம அளவில் நீச்சல், மரம் ஏறுதல் போன்ற திறன் கொண்ட தன்னார்வலர்களை இணைத்து முதல்நிலை மீட்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தேடுதல், மீட்பு, முதலுதவி, தங்குமிடம் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளுக்கு தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, அபாயகரமான 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு 23,325 பேரைக் கொண்ட முதல்நிலை மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6,740 பெண்கள் மற்றும் பாம்புபிடி வீரர்கள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த கால வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை மாவட்டம் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ், கடலோர மாவட்டங்களில் பொதுப்பணித்துறையால் ரூ.345 கோடியே 60 லட்சத்தில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 23, கடலூர், தஞ்சையில் தலா 14, விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 12 அமைக்கப்படுகிறது.

பேரிடர் காலங்களில் எண்ணெய், தொலைத் தொடர்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மீட்புக்குழு, உபகரணங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்

கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால், 140 ஆண்டு காலம் இல்லாத வறட்சி ஏற்பட்டது. எனவே, இந்த ஆண்டு மழையை எதிர்பார்கிறோம். வானிலை குறித்த உறுதி செய்யப்படாத தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுபற்றிய தகவல்களை அறிய 1070, 1077 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம். தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டுதான் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 32 வருவாய் மாவட்டத்திலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர, தலைமைச் செயலரும் அனைத்து துறைகளின் செயலர்களுடன் தொடர்ந்து ஆய்வு நடத்தி, பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x