Published : 27 Oct 2017 02:27 PM
Last Updated : 27 Oct 2017 02:27 PM

உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்க தடை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

உயிருடன் இருப்பவர்களுக்கு போட்டோவுடன் பேனர் வைக்க தடை விதித்த, தனி நீதிபதி வைத்தியநாதனின் உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சத்தியநாராயணா, சேஷசாயி அமர்வு, தடைவிதிக்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.

உயிருடன் இருப்பவர்கள் படத்தை பேனராக வைக்கக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அவசர மனுவாக விசாரிக்க சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் அமர்வு மறுத்து விட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயன் தனது வாதத்தில், ''விதிகளை மீறுவது என்பது வேறு விவகாரம். ஆனால், புகைப்படத்துடன் பேனர்கள், கட்- அவுட்கள் என இந்த தடை உத்தரவு என்பது அரசியலமைப்பு கொடுத்திருக்கும் உரிமைக்கு முற்றிலும் எதிரானது என தெரிவித்தார்.

விளம்பரம் செய்யும் ஒருவரின் புகைப்படத்தை விளம்பரத்தில் போடக்கூடாது என்று எப்படி கூற முடியும். அதற்காக அவர் இறக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? என வாதிட்டார்.

விதிகள் மீறி பேனர்கள், ப்ளக்ஸ் உள்ளிட்டவைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது புகைப்படத்துடன் கூடிய பேனர்களுக்கு தடை என உத்தரவிடுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

எனவே உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் என் வீட்டுக்கு முன்பு வைக்கப்பட்ட பேனர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இன்னும் எங்கள் பகுதியில் பல நிறுவனங்கள், என்.ஜி.ஓ.க்கள் வைத்த பேனர்கள் கூட இன்னும் அகற்றப்படவில்லை.

அதே போல அகற்றினாலும் மீண்டும் உடனடியாக புதிய பேனர்கள் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுபோன்ற பேனர்கள் தொடர்பான 1000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தனி நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது. இது போன்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை அதிகாரிகள் எடுத்தார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விதிகளுக்குட்பட்டு பேனர் உள்ளிட்டவை வைக்க அனுமதி அளிப்போம், ஆனால் அந்த பேனரில் என்ன எழுதுகிறார்கள், புகைப்படம் வைக்கிறார்கள் என ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்ய முடியாது. மேலும் அப்படி செய்ய போதிய ஊழியர்கள் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இது போன்ற விவகாரங்களைக் கண்காணிக்க தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அவர்களை இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைக்கு முறையாக பயன்படுத்துகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் அவர்களை அரசின் வேறு பணிகளுக்கு பணிகளுக்கு பயன்படுத்துகிறீர்கள். அதேபோல அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்கிறீர்கள் . அவர்களை முறையாக செயல்பட விடாமல் செய்கிறீர்கள். போதிய ஊழியர்கள் இல்லையென்றால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் சத்தியநாராயணா, சேஷசாயி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து, வழக்கை திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக் கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x