Published : 10 Oct 2017 04:12 PM
Last Updated : 10 Oct 2017 04:12 PM

நடிகர் சந்தானம் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

வழக்கறிஞரை தாக்கியதாக போலீஸார் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சந்தானம் வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்ட, அந்நிறுவனத்திற்கு முன்பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை 3 ஆண்டுகளாக கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது. இந்நிலையில் சந்தானத்திற்கு திருப்பி கொடுத்த தொகையில் மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்கச் சென்ற சந்தானத்துக்கும், அதன் நிறுவனர் சண்முக சுந்தரம், அவரது நண்பரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்துக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

வாய் தகராறு முற்றி கைகலப்பானதில் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. சந்தானமும் தாக்கப்பட்டார். இந்த பிரச்னை தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரேம் ஆனந்த் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சந்தானம் மீது 506(1), 294(பி), 324 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சந்தானம் தலைமறைவானார். தான் இந்த விவகாரத்தில் கைது செய்யக்கூடும் என்று அஞ்சிய நடிகர் சந்தானம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அவரது முன் ஜாமீன் மனுவில் ” இந்த தாக்குதல் நடவடிக்கைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை தவறாக என் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x