

சென்னை: பெங்களூரில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின் பதவியேற்பு விழா மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வர், 8 அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவி ஏற்பு விழாவில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சித்தராமையாவிற்கும், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா!" என்று அதில் கூறியுள்ளார்.