

நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் அரசுப் பள்ளி அருகே கள்ளச் சந்தையில் மதுபானம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆவாரங்காடு ஜனதா நகரைச் சேர்ந்த நீலா என்ற பெண், காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். எனினும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து நீலா கூறியதாவது: ஜனதா நகரில் எங்களது குடியிருப்பு அருகில் கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல பள்ளிபாளையம் அரசுப் பள்ளி அருகில் மதுபானம் விற்பனை செய்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
வீட்டில் தாக்குதல்: இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால், திமுகவை சேர்ந்த நகராட்சித் தலைவர் செல்வராஜ் தூண்டுதலின் பேரில் சிலர் என் வீட்டில் உள்ளபொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
இதுகுறித்து, நகராட்சித் தலைவர் செல்வராஜ் கூறும்போது, ‘‘புகார் தெரிவித்த நீலாவின் கணவர் அய்யனார் மீது கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்பனை செய்ததாக ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் காவல் நிலையங்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அவரது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாடகைக்கு வீடு எடுத்து மதுபானம் விற்பனை செய்து வந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் அந்த வீட்டிலிருந்து அவர் காலி செய்யப்பட்டார். இதற்கு நான் காரணம் என புகார் தெரிவிக்கின்றனர். திமுக பொறுப்புக்கு வந்தபின்னர் பள்ளிபாளையத்தில் இருந்த சந்துக்கடைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன’’ என்றார்.