

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில், சூறாவளி காற்றுக்கு ஆயிரக்கணக்கிலான வாழைகள் சேதமடைந்தன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகமிக அதிகப்படியான வெயில் நிலவிவருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் வெளியே நடமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கோடை வெயிலை தணிக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை திருப்பூர் மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதில் திருப்பூரை சேர்ந்த கணேசன் (59) என்பவர், நல்லூர் மணியகாரம்பாளையத்தில் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டிருந்தார். அனைத்துவாழைகளும் அறுவடைக்கு காத்திருந்தன. இந்நிலையில், சூறாவளிகாற்றால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழை மரங்களும் அடியோடு முறிந்து சேதமடைந்தன.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஏற்கெனவே கடந்த மாதம் 300வாழைகள் மழைக்கு சரிந்தன. தற்போது மீண்டும் வாழைகள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிகுந்த சிரமத்துக்கு இடையேதொழில் செய்துவரும் நிலையில்சூறாவளி காற்றுக்கு வாழைகள் முழுவதும் அடியோடு சரிந்தன. 3வாரங்களுக்குள் அறுவடை செய்ய இருந்த நிலையில், தற்போது எங்களால் மீள முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதேபோல, உடுமலையை அடுத்த குமரலிங்கம் அருகே சாமராயப்பட்டி, பாப்பான்குளம், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த 17-ம் தேதி நள்ளிரவு திடீரென மழை பெய்தது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்று வீசியது. அதில், சாமயராயபட்டி கிராமத்தில் விவசாயிக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் மேற்கூரை பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது.
அதில், இருந்தசுமார் 5 ஆயிரம் கோழிகுஞ்சுகள் உயிரிழந்தன. பாப்பான்குளத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 2 ஏக்கர் வாழை மரங்கள், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் சேதமானது. சாமராயபட்டி, பாப்பான்குளம் கிராமத்தில் பலத்த காற்றின் காரணமாக 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும், அவை உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது விழுந்ததால் 26 இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், அடியோடு சாய்ந்து சேதமாகின.
மின்வாரியத்தினர் கூறும்போது, "பாப்பான்குளத்தில் 8, சாமராயபட்டி பகுதியில் 18 உட்பட 26 மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, அனைத்து பகுதிகளூக்கும் சீரான மின் விநியோகம் கிடைக்கும்" என்றனர்.