Published : 20 May 2023 06:14 AM
Last Updated : 20 May 2023 06:14 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.எம்.சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை நம்பியே, மாங்கூழ் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது, உள்ளூர் மாவிவசாயி களுக்கு முன்னுரிமை அளிக்காமல், வெளிமாநில மாவிவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் தரும் மா மரங்களை பராமரிப்பது மிகவும் கடினமாகவும், அதிக செலவும் செய்ய வேண்டியுள்ளது. பூச்சித் தாக்குதல், பருவநிலை மாற்றம் என 5 ஆண்டுகளாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. மகசூல் பாதித்த நிலையில், மாங்கனிகளுக்கு சிண்டிகேட் மூலம் விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகளுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டில், கடந்த மாதம் முதல் முதிர்ச்சியடைந்த மாங்கனிகள் அறுவடை செய்யப்பட்டு, மாங்கூழ் தொழிற்சாலைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் 1 கிலோ மாங்கனிக்கு 20 ரூபாய் என்கிற விலையில், மாங்கூழ் அதிபர்கள், மா விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர்.
விவசாயிகள் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நடந்த, முத்தரப்பு கூட்டத்தில், ஒரு கிலோவிற்கு 20 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்த்துங்கள் என ஆட்சியரும் அறிவுறுத்தினார். ஆனால் மாவிற்கான விலையை உயர்த்துவதற்கு பதிலாக விலையை குறைத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம், அகில இந்திய மாங்கனி கண்காட்சியை கிருஷ்ணகிரியில் நடத்துவது மா விவசாயிகளுக்கு எவ்வித பலனும் அளிக்காது.
எனவே, மாங்கனி கண்காட்சியை மாவிவசாயிகள் புறக்கணிக்கிறோம். மாங்கூழ் அதிபர்களிடமிருந்து, மா விவசாயிகளை தமிழக முதல்வர் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT