Published : 20 May 2023 06:35 AM
Last Updated : 20 May 2023 06:35 AM

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பணிமனைகளில் தினமும் 15 நடத்துநர்களுக்கு பணி இல்லை: தொழிலாளர் துறை ஆய்வில் தகவல்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 பணிமனைகளில் தினமும்15 நடத்துநர்களுக்கு பணி வழங்கப்படுவதில்லை என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் சார்பில் தொழிலாளர் நலத்துறைக்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில், "மோட்டார் வாகன சட்டப்படி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களின் வருகைப் பதிவு, பணி வரன்முறை, பணி ஒதுக்கீடு, குடிநீர், கழிவறை, ஓய்வறை ஆகியன முறைப்படி இல்லை" என கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்துக்கு தொழிலாளர் துறை அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அயனாவரம், பெரம்பூர், அண்ணா நகர் பணிமனைகளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அயனாவரம் பணிமனையில் ஓட்டுநர்கள் 250 பேரும், நடத்துநர்கள் 280 பேரும், பெரம்பூர் பணிமனையில் ஓட்டுநர்கள் 317 பேரும், நடத்துநர்கள் 327பேரும், அண்ணா நகர் பணிமனையில் ஓட்டுநர்கள் 386 பேரும், நடத்துநர்கள் 423 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு ஓட்டுநர்கள் குறைவாகவும், நடத்துநர்கள் அதிகமாகவும் உள்ளனர். நடத்துநர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுப்பதால் தினமும்நடத்துநர்களில் 15 பேருக்கு பணி வழங்க இயலாத நிலைஉள்ளது. எனினும் நடத்துநர்களுக்கு 18-ல் இருந்து 20 நாட்களுக்கு குறையாமல் பணி வழங்கப்படுகிறது.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வருகை புரிந்து, அன்று அவர்களுக்கு வண்டி ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் ரூட் அட்டையில் தொடர்புடைய ஓட்டுநர், நடத்துநர் கையொப்பம் இடுவார்கள். ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதவர்கள் உரிய பதிவேட்டில் அவர்களின் வருகையை தெரிவிக்கும்வகையில் ஒரு பதிவேட்டில் கையொப்பமிடுவார்கள். அவர்களுக்கு விடுப்பு இருந்தால் விடுப்பிலும், இல்லையென்றால் சம்பளமில்லா விடுப்பும் வழங்கப்படுகிறது என மேலாளர்கள் தெரிவித்தனர்.

ஓய்வறை, கழிவறை, குடிநீர் ஆகியன தூய்மையாக உள்ளன. சான்றிடப்பட்ட நிலை ஆணை நகலை தொழிலாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்குமாறு கிளைமேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x