Published : 20 May 2023 06:17 AM
Last Updated : 20 May 2023 06:17 AM
சென்னை: வெப்ப அலையில் இருந்துகாத்துக்கொள்ள, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலையில் பயணிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலைஆய்வு மையத்தின் மே 19-ம் தேதி அறிவிக்கையில், தமிழகத்தில் இயல்பு நிலையைவிட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூர் பகுதியில் 41.8 டிகிரி செல்சியஸ், கரூர்-பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், திறந்த இடங்களில் பணியாற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய துறையின் அலுவலர்கள் செய்ய வேண்டும். அத்துடன், இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், ஓஆர்எஸ் இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில்கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும்அவசர மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சிஅமைப்புகளும் தொடர்புடைய துறை அலுவலர்களும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில், கூடுதல்வெப்பம் உற்பத்தி ஆகும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான ஓய்வுவழங்கவும், அவசரகால உதவிக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய சேவைக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோரை வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசு தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும் பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT