Published : 20 May 2023 06:10 AM
Last Updated : 20 May 2023 06:10 AM
சென்னை: காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் 2015-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, கரையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சேதம் அடைந்தன. இவர்களுக்கு குடிசை மாற்றுவாரியம் சார்பில் 2,112 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுக்க அரசு முடிவு செய்தது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் 6.99 ஹெக்டர் இடம் அடையாளம் காணப்பட்டது.
இந்த இடத்தில் தரை தளத்துடன் 4 தளங்களுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்காக குடிசை மாற்றுவாரியம் சார்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்ததை சென்னை அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று சுமார் ரூ.179 கோடியே 69 லட்சம் என்ற தொகைக்கு எடுத்தது. இந்த வீடுகள் கட்டப்பட்டதில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குடியிருப்பு கட்டிய நிறுவனம், அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறியது தெரியவந்தது. மேலும்,கட்டிட வடிவமைப்பில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததும், குடிசைமாற்று வாரிய கட்டிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளை மீறியதும், ஒப்பந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிட அளவை காட்டிலும், குறைவான அளவில் கட்டிடத்தை கட்டியதும், இதன் மூலம் அந்த நிறுவனம், அரசுக்கு பணம் இழப்பை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதில் அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தும் வகையில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் செயல்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குடிசை மாற்று வாரிய பெண் அதிகாரி, தனியார் கட்டுமான நிறுவன நிர்வாகி உள்பட 6 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இவர்களில் இருவர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT