Published : 20 May 2023 06:04 AM
Last Updated : 20 May 2023 06:04 AM
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடையில்லை என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜல்லிக்கட்டு விளையாட்டு சார்ந்த பல்வேறு அமைப்பினர் சந்தித்தனர். அப்போது, அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் பெய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்டங்களில், குறிப்பாக மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்றபகுதிகளில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படு கின்றன. பொதுமக்களால் மதுரை,புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சேலம் போன்ற பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
ராமநாதபுரத்தில் ரேக்ளா ரேஸுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் 2006-ல் ரேக்ளா ரேஸ் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில், தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் 2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், பீட்டா, விலங்குகள் நல வாரியம் போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குத் தொடர்ந்தன. அங்கு வழக்கு நடைபெற்றாலும், சில கட்டுப்பாடுகளுடன் 2008-ம்ஆண்டில் அரசு சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உடனடியாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததால், தடை விதித்த நீதிபதிகளே, சில கட்டுப்பாடுகளுடன் போட்டியை நடத்த அனுமதித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டம் இயற்றுமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து, 2009-ல் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 2014 வரை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில், சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
அதன் பின்னர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முறையாகநடத்தாததால், தடை விதிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோதும், அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் மக்கள் போராட்டம்அலங்காநல்லூர் தொடங்கி,மெரினா வரை நீடித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தடை கேட்ட அமைப்புகள் மேல்முறையீடு செய்தன. இந்தவழக்கில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி, நல்லதீர்ப்பை முதல்வர் பெற்றுத்தந் துள்ளார்.
இதற்காக சம்பந்தப்பட்ட இயக்கத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT