Published : 02 Oct 2017 04:01 PM
Last Updated : 02 Oct 2017 04:01 PM

நவ.20-ல் மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு: வைகோ அறிவிப்பு

வரும் நவம்பர் மாதம் சென்னையில் மிகப் பிரம்மாணடமான முறையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

மதிமுக சார்பில் சென்னையில் காமராஜர் அரங்கில் வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த உள்ளோம். மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க உள்ளோம்

மத்திய அரசு பல்வேறு வகைககளில் தமிழகத்துக்கு கேடு செய்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றன. தமிழக விவசாயிகளை, மக்களை பாதிக்கிற திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து தீர்ப்பாயத்தில் வாதாடி வருகிறோம்.

ஆனால் தீர்ப்பாயத்தையே கலைத்துவிடும் முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றி பல லட்சம் கோடி ரூபாயை சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் விவசாயிகள் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

கோவையில் 1960-ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட 132.7 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் மத்திய அரசு அச்சகத்தை மூடிவிட்டு வடமாநிலத்தில் இயங்கும் அச்சகத்துடன் இணைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.

இந்த மத்திய அரசின் அச்சகம் இதுவரை சிறப்பாக இயங்கி வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அச்சகத்தை கையகப்படுத்தி விற்பனை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அச்சகத்தின் நிலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளது அதை விற்று காசாக்க முடிவு செய்து அச்சகத்தை வடமாநிலத்துக்கு மாற்றுகிறார்கள். இதை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டத்தை விரைவில் நடத்த உள்ளோம்.

காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரை திறக்க உள்ளனர். காவிரி டெல்டாவிற்கு 6 போக சாகுபடி இல்லாமல் போய் விட்டது. எந்த நிபந்தனையுமின்றி கூட்டுறவு கடனை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்., இடு பொருட்களை 100 சதவீத மானியத்தில் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் நவோதயா பள்ளியை திறக்க அனுமதி அளிக்கவில்லை. ஆனால் இந்த அரசு அனுமதிக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சீமைக்கருவேல மரங்களை வளர்த்து பாதுகாப்போம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். அவர் கருவேல மரங்களை அகற்றுவோம் என்பதை அப்படி சொல்லிவிட்டாரா? அல்லது அப்படி செய்தி வந்துவிட்டதா தெரியவில்லை.

இவ்வாறு வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x