Published : 28 Oct 2017 18:52 pm

Updated : 28 Oct 2017 18:52 pm

 

Published : 28 Oct 2017 06:52 PM
Last Updated : 28 Oct 2017 06:52 PM

நவம்பர்-8 பணமதிப்பு நீக்க தினம்: இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்பாட்டம்

8

நவம்பர்-8 ஆம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம், இந்திய பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. ஏழை, எளிய மக்களின் வாழ்வை சூறையாடியுள்ளது என்று தெரிவித்துள்ள இடதுசாரி கட்சிகள் வரும் நவம்பர்-8 அன்று கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்.எல்), எஸ்.யு.சி.ஐ (சி) ஆகிய இடதுசாரி கட்சிகள் கூட்டாக இன்று விடுத்த அறிக்கை:

”இடதுசாரிக் கட்சிகள் எச்சரித்தபடியே பண மதிப்பு நீக்கம் இந்திய பொருளாதாரத்தின் மீதும், இந்திய மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் தொடர் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது பணமதிப்பு நீக்கத்திற்கு, கருப்பு பணமீட்பு, கள்ளப்பணம் தடுப்பு, பயங்கரவாதிகள் பணப்பரிமாற்ற தடை என அரசால் சொல்லப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேறவில்லை.

கருப்பு பணம் பதுக்கியிருந்ததாக ஒரு நபர் கூட தண்டிக்கப்படவில்லை. மொத்தக் கருப்பு பணமும் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு விட்டது. கள்ளப்பணமும் ஒழிக்கப்படவில்லை. பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்படும் என்றார்கள். மாறாக, இந்த காலத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படை வீரர்களும், இராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஊழல் இரட்டிப்பாகியிருக்கிறது. மொத்தத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. அது சிறு-குறு தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக சீர்குலைத்திருக்கிறது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மூன்றாவது முக்கியப் பங்களிப்பு செலுத்துகிற முறைசாரா தொழில் அடியோடு அழிக்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசு 2014 தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இதனால் விவசாயம், தொழில், சேவைத்துறை அனைத்தும் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. விவசாயிகள் தற்கொலை, வேலையிழப்பு, வேலையின்மை, புதிய தொழில் உருவாகாதது அனைத்தும் மக்கள் மத்தியில் பேரிடியாய் இறங்கியுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என தேர்தல் வாக்குறுதி சொல்லப்பட்டாலும் ஏற்கனவே இருந்த வேலைவாய்ப்புகளும் மறைந்தது தான் இக்காலத்தில் மிகத்துயரமான நிலை. விவசாயிகள் தற்கொலையும் இக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.

“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது” போல பொருளாதாரத்தை முற்றிலும் நிலைகுலையச் செய்யும் அடுத்த நடவடிக்கையாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவே தான் இடதுசாரிக் கட்சிகள் இந்திய நாடு முழுவதும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8- ஆம் தேதியை கண்டன தினமாக கடைபிடிப்பது என டெல்லியில் கூடிய 6 இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில் நவம்பர் 8- ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தர்ணா நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு இடதுசாரி கட்சித்தலைவர்கள், ஜி. ராமகிருஷ்ணன், ஆர். முத்தரசன், குமாரசாமி, ஏ. ரெங்கசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author