

மதுரை: நீதிமன்றங்கள் ஜனநாயகத்துக்கு முக்கியமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மறைந்த மூத்த வழக்கறிஞர்களின் படத் திறப்பு விழா மற்றும் உடமைகள் வைப்பு அறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் ஹபிஸா, மலைச்சாமி ஆகியோர் பங்கேற்று படங்களை திறந்து வைத்தனர்.
இதில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தமிழகத்தில் ரூ.62 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருந்த நிலையில் மதுரை நீதிமன்ற கூடுதல் கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும். என்னைப் பொறுத்தவரை பதவி, பொறுப்பு, ஆளும்கட்சி, எதிர்கட்சி என்பதில்லை. என்றும் எனக்கு கொள்கையும், தத்துவமும் தான் முக்கியம். அது எப்போதும் மாறாது. நீதிமன்றம் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானது" என்றார்.
இதே விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி டிராஜா பேசுகையில், "வழக்கை முழுவதும் அறிந்து கொண்டு சுருக்கமாகவும், தெளிவாகவும் வக்கீல்கள் வாதிட வேண்டும். அப்போது தான் நீதிபதியின் கவனத்தை பெற்று உத்தரவு பெற முடியும். 3 முதல் 5 நிமிடங்களில் பேசி வழக்கை நடத்தினால் சிறந்த வெற்றிகரமானவராக முடியும். இதற்கு கடினமான உழைப்பு முக்கியம்.
நீதிபதி ஆவதால் நல்ல பல காரியங்களை செய்ய முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் வைகையில் தடுப்பணை கட்டி, வற்றாத அளவுக்கு வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்கி அதன் இயல்பு நிலைக்கு கொண்டுவர முடிந்தது. மிகவும் அற்புதமான அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கி கொடுத்துள்ளார். பல நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கப்படவில்லை. இந்தியா பலமாக இருப்பதற்கு நமது அரசியலமைப்பு சட்டம் தான் காரணம். ஆணுக்கு பெண் சமம் என்ற சமநீதியைக் கொண்டதும் நமது நாடு மட்டுமே.
நீதிமன்றம் எந்த விசயத்தையும் சமமாகவே பார்க்கிறது. பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற்றத்தை உருவாக்குவார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் 14 பெண் நீதிபதிகள் உள்ளனர்" என்றார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், "சோசலிசத்தின் மறுபதிப்பாக திராவிட மாடல் உள்ளது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதே திராவிட மாடலின் நோக்கம் நீதிக்கட்சி காலத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் தீர்ப்புகளை யாரும் மாற்ற முடியாது. அந்தளவுக்கு தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பையே கூறலாம்" என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.விமலா பேசுகையில், ‘நீதி வழங்குவதில் சரி, நீதிபதிகள் நியமனத்திலும் சரி ஆண், பெண்களில் பாகுபாடு பார்க்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட குறைவாகவே உள்ளது. வழக்கறிஞர்கள் தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மின்னணு பயன்பாடு சிறப்பாக உள்ளது. இருந்த இடத்தில் இருந்து புகார் செய்யலாம், புகாரை பதிவு செய்யலாம், நிவாரணம் பெறலாம்.
சீனாவில் ரோபோக்கள் நீதிமன்றம் உள்ளது. அங்கு போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை ரோபோக்கள் தான் வழக்கு பதிவு செய்கிறது. விசாரிக்கிறது. அபராதம் விதிக்கிறது. இதனால் தொழில்நுட்ட முன்னேற்றங்களை வழக்கறிஞர்கள் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.
மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன். செயலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.