நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்ட தடை கோரிய வழக்கு: ஈரோடு ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும், தமிழக அரசின் அரசாணைக்கும் விரோதமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள பூந்துறை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உரிய அனுமதிகளைப் பெறாமல், கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களை மத ரீதியாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசும், அரசாணைகளை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவையும், அரசாணைகளையும் மீறும் வகையில் பூந்துறை கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, எந்த அனுமதியுமின்றி தேவாலயங்கள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர். நத்தம் புறம்போக்கு நிலத்தை தேவாலயங்கள் கட்ட ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தேவாலய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
