

சென்னை: கல்லூரி மாணவர்கள் 700 பேர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: அண்மையில் நேபாளத்தில் சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. அதில் 12 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் தலா 12 தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற பள்ளி மாணவர்கள், 10 மணி நேரம் சிலம்பத்தை சுற்றி உலக சாதனை படைத்த 108 சிறுவர்கள் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற் றனர்.
அதைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
அதேபோல, திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராஜேஷ் ஏற்பாட்டில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது கட்சியின் மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.