Published : 19 May 2023 06:18 AM
Last Updated : 19 May 2023 06:18 AM

உணவுப் பொருட்கள் தரமானதா என்பதை பரிசோதிக்க திருப்பூரில் நடமாடும் உணவு ஆய்வக வாகனம்

திருப்பூர்: சாப்பிடும் உணவுப் பொருட்கள் தரமானதா என்பதை பரிசோதிக்கும் வகையில், திருப்பூரில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தொடங்கிவைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பு துறையில் நடமாடும்ஆய்வக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஆய்வக வாகனத்தை ஆட்சியர் சு.வினீத் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக திருப்பூர்மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது: உணவுப்பொருள் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்றுசோதனைகள் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

உடனடியாக பரிசோதனை செய்து முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், பல்வேறுவசதிகள் வாகனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய வாகனத்தின் சேவை, ஜூன் 5-ம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, உணவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

நடமாடும் ஆய்வகம் மூலமாக உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதன் தரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். பொது இடங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, அவர்கள் உட்கொள்ளும் துரித உணவுப் பொருட்களின் தன்மை குறித்தும், உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

வீடுகளில் இல்லத்தரசிகள் வழக்கமாக பயன்படுத்தும் மசாலா பொருட்கள் தரமானவையா என்பதையும், நிறமிகள் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும் உடனடியாக அறிந்துகொள்ளலாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட வேதிப்பொருட்கள் குறித்த தன்மையை தாமாகவே கண்டறிய விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த நடமாடும் ஆய்வக வாகனம் மூலமாக, பொருட்களின் தரத்தை பரிசோதித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையலாம்.

உணவகங்கள் சுத்தமற்ற முறையில் விநியோகம் செய்தால், 9444042322 என்ற நுகர்வோர் புகார் எண்ணுக்கு, புகைப்படங்கள் எடுத்து பொதுமக்கள் புகார் அனுப்பலாம். உணவு தரம் இல்லையெனில், வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பலாம். உணவு உட்கொண்ட பிறகு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும், மேற்கண்ட எண்ணுக்கு வாட்ஸ்-அப் குறுந்தகவல் அனுப்பி புகார் தெரிவிக்கலாம். புகார் அனுப்பக்கூடியவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x