

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூர், பையர்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று மாலையும் அரூர் பகுதியில் மழை பெய்தது.
அரூர் அருகேயுள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, ஆலாபுரம், கோபாலபுரம், பட்டவர்த்தி, பறையப்பட்டி, ஆத்தூர், அய்யம்பட்டி, தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடத்தூர் அடுத்த தாளநத்தம் கிராமத்தில் நேற்று சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், தாளநத்தம்- பொம்மிடி செல்லும் பிரதான சாலையில் மூன்று மின் கம்பங்கள் முறிந்து சாலை நடுவே விழுந்தன. உடனடியாக அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் பாதி வழியிலேயே பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மழையில் நனைந்தவாறு தங்கள் கிராமத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின் கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.