Published : 19 May 2023 06:12 AM
Last Updated : 19 May 2023 06:12 AM
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் வெயிலின் தாக்கத்திலிருந்து விலங்குகளைக் காக்க கோடை மேலாண்மைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வனத்தில் வாழும் விலங்குகள் கோடைக்கால வெப்பத்தைத் தணித்துக்கொள்ள, சுதந்திரமாகத் திரிந்து,இயற்கையாக அமையப் பெற்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் அடைப்பிடத்துக்குள் உள்ள விலங்குகள் அவ்வாறு சுதந்திரமாகத் திரிந்து நிலைமையைச் சமாளிக்க வாய்ப்பு இல்லை.
கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால் விலங்குகள் உணவு உண்பதைக் குறைத்துக்கொள்ளும். இதனால் விலங்குகள் மெலிந்துபோக வாய்ப்பு உள்ளது. விலங்குகள் இருப்பிடங்களில் ஆறுதலான வெப்பநிலை நிலவாதபோது பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாவதுடன், வெப்ப வாதம் போன்றவற்றால் விலங்குகள் இறந்துபோக வாய்ப்புகள் உண்டு. இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் கோடைக்கால மேலாண்மைப் பணிகளைப் பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில தினங்களாகச் சென்னை, புறநகர் பகுதிகளில் கடும்வெயில் வாட்டி வருகிறது. அதனால்வண்டலூர் மற்றும் கிண்டி பூங்காக்களில் விலங்குகளின் தன்மைகளுக்கு ஏற்றவாறு பல வழிகளில் கோடைமேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக யானைகள் வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக சகதிப்புரள் குட்டை, தெளிப்பான் குளியல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்வையாளர்கள் கண்டுகளிக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுகளுடன் கோடைக்கால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது.
மனிதக் குரங்குகளுக்குக் கோடைக்கால உணவாக தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், லஸ்ஸி ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் தெளிப்பான் குளியலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கவால் குரங்கு, நாட்டுக் குரங்கு, செங்குரங்கு, கருங்குரங்கு, அனுமன்குரங்கு, கப்புச்சின் குரங்கு போன்ற குரங்கினங்களுக்கும் தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்படுகின்றன. சிறுகரடி மற்றும்இமாலய கருங்கரடி ஆகியவற்றுக்கும் கோடைக்கால உணவாக தர்பூசணி வழங்கப்படுகிறது.
பறவைகளின் இருப்பிடங்களைச் சுற்றிலும் சணல் கோணிகள் கட்டப்பட்டு காலை மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு குளிர்ச்சியான சூழல் உருவாக்கப்படுகிறது. காட்டு ஆடு, வெளிமான், வராகமான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான், கடமான், காட்டுக் கழுதை, செந்நாய், சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகளின் இருப்பிடங்களில் பிரமீடு வடிவ கொட்டகைகள் அமைக்கப்பட்டு விழலால் கூரை வேயப்பட்டுள்ளது. இத்தகைய கொட்டகைகளில் அதிகப்படியான குளிர்ச்சி நிலவுவதால் விலங்குகள் அதன் அடியில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.
ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை, நெருப்புக்கோழி ஆகிய விலங்குகள் இருப்பிடங்களில் நீர்த்தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைத் தணித்துக்கொள்ளும் பொருட்டு இதர விலங்குகளின் இருப்பிடங்களில் உள்ள நீர்ப்பிடிப்புக் குட்டைகளில் எப்பொழுதும் நீர்த்தேக்கிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT