

சென்னை: ஆவின் தினசரி பால் கையாளும்திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்தஇந்த ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
ஆவின் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட கூட்டுறவுபால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
முன்னதாக, நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஆவின் நிறுவனம் மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தினசரி ஆவின் பால் கையாளும் திறன் 40 லட்சம் லிட்டர் ஆகும். இதை இந்த ஆண்டுக்குள் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தொழில் செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்படும். தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை மேற்கொள்ளும்போது, பால் உற்பத்தி அதிகரிகரிக்க வேண்டும். இதற்காக, 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கப்படும்.
அனுமதியின்றி பால் உற்பத்தியாளர் சங்கம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆபத்தானது. இந்த பால் என்ன தரத்தில் கொடுக்கிறார்கள் என்பது தெரியாது. அனுமதி இன்றி செயல்படுகிற அல்லது கலப்பட பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த தொகை மிக அதிகமாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு தரப்பில் இருந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, ரயில் நிலையங்களில் ஆவின் பாலகம்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.