18 ரயில் நிலையங்களில் ராட்சத மின்விசிறிகளை நிறுவ திட்டம்

18 ரயில் நிலையங்களில் ராட்சத மின்விசிறிகளை நிறுவ திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ராட்சத மின்விசிறிகளை நிறுவ ரயில்வேநிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நெடுந் தொலைவு பயணத்துக்கு உகந்த போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து விளங்குகிறது. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் ரயில் பயணத்தை அதிக அளவில் விரும்புகின்றனர். ரயில்களில் சுற்றுலா நகரங்கள் உட்பட பல நகரங்களுக்குச் செல்வதற்காக, சென்னையில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகின்றனர். இதன் காரணமாக, சென்னைசென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில், ரயில் நிலையங்களுக்கு வந்து காத்திருக்கும் பயணிகள் வசதிக்காக,18 ரயில்நிலையங்களில் நவீனதொழில்நுட்பம் கொண்டராட்சத மின் விசிறிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் கொண்ட 4 ராட்சத மின்விசிறிகள் நிறுவப்பட்டுள்ளன. இதுபோல, எழும்பூர், காட்பாடி, தாம்பரம், கிண்டி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்பலம், திருத்தணி, சென்னை கடற்கரை, பூங்கா,ஜோலார்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 18 நிலையங்களில் ராட்சத மின்விசிறிகள் நிறுவப்பட உள்ளன.

இது, அதிக காற்றோட்டம் வழங்கும் குறைந்த வேக (HVLS) மின்விசிறி என்று அழைக்கப்படுகிறது. இந்த விசிறிகள் மெதுவாகச் சுற்றுகின்றன. அதேநேரத்தில் அதிக அளவு காற்றை வழங்குகின்றன.

ஒரு மின்விசிறி விலை ரூ.2.5 லட்சம். பெரிய ரயில்நிலையங்களில் தலா 4மின் விசிறிகளும், சிறியநிலையங்களில் தலா 2மின்விசிறிகளும் நிறுவப்பட உள்ளன. ஒவ்வொரு மின்விசிறியும் சுமார் 20 மீட்டர் சுற்றளவு கொண்டது. 5 இறக்கைகள் உள்ளன. இந்த மின்விசிறிகள் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in