Published : 19 May 2023 06:07 AM
Last Updated : 19 May 2023 06:07 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி விற்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்தவர்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மரக்காணம், திண்டிவனம் அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இதுவரை ஒரு பெண் உட்பட 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும், மரக்காணம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 61 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, “சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலோனர் வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு கண்ணில் புரை ஏற்பட்டு பார்வை மங்கலாக தெரியக் கூடும்.
தற்போது பயத்தினால் அவர்களுக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது போல தெரிகிறது. கள்ளச்சாராயம் குடித்ததால் யாருக்கும் இதுபோன்ற தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். கண்ணில் புரை ஏற்பட்டு பார்வை மங்கலாக தெரியக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT