Published : 19 May 2023 06:15 AM
Last Updated : 19 May 2023 06:15 AM
கடலூர்: பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போல் இந்தியாவிலும் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டு, ஈழப் போரில் உயிர்மாண்ட பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவர்களின் படங்களுக்கு நினைவு தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழீழ விடுதலை களம் தமிழ்நாட்டுக்கு அந்நியமான களம் அல்ல. விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அந்நியமான களம் அல்ல. தேர்தல் கணக்கு போட்டு போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கமல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் சொன்னேன் பழனிசாமி மதுவிலக்கை எதிர்த்து போராடதயாரானால் நாங்களும் போராடுவோம் என கூறினேன்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதே அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ், நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து பயணப்பட்டவன் நான். இது ஒரு மாறுபட்ட அணுகுமுறை. இந்த துணிச்சலை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.
தமிழீழ விடுதலையை ஆதரிப்பது இனவாதத்தை ஆதரிப்பது அல்ல. ஒரு சிறுபான்மையை பெரும்பான்மை ஒடுக்கும்போது அதனை எதிர்ப்பது ஒரு ஜனநாயக சக்தியின் கடமை. அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது. இங்கு சங்க்பரிவார கும்பல் ஒரு மொழி, ஒரு கலாச்சாரத்தை பிடிக்க பார்க்கிறது.
சிங்களத்திலும் இதே நிலைதான் நடைபெற்றது. அங்கு சிங்களம், பவுத்த பேரினவாதம். இங்கு இந்து, இந்தி பேரிணவாதம். இதை இப்படியே விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை, தமிழீழத்தில் செய்ததுபோல் படுகொலை செய்வார்கள். ஆர்எஸ்எஸ், சங்க்பரிவாரத்தை வீழ்த்தாவிட்டால், பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போல் இந்தியாவிலும் நடைபெறும்.
அங்கேயும் வெறுப்பு அரசியல். இங்கேயும் வெறுப்பு அரசியல். எனவே தான் ஆளுநர் சனாதனத்தை பாதுகாக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினையை பற்றி பேசி வருகிறார். புரட்சியாளர்கள் நடமாடிய மண்ணில் சனாதன சங்கிகள் நடமாடுகிறார்கள்.
தமிழீழ விடுதலையை விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து பேசுவோம். அதன் அரசியலை அடைகாப்போம். போராட்டத்தை முன்னெடுப்போம். தமிழீழம் வெல்லும். அதனை காலம் சொல்லும் என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT