

சென்னை: கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களில் இம்மாதம் 20-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜகவினர் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
இந்தக் கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.