

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று புகார் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இதுதொடர்பாக வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பாக களத்துக்கு வரக்கூடிய தலைவர் ஒருவர், ஆளுநரைச் சந்திந்து டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார். டாஸ்மாக் நிறுவனத்தில் 2 ஆண்டு மொத்த விற்பனையே ரூ.93 ஆயிரம் கோடிதான். அந்த வகையில் ஆண்டுக்கு சாராசரியாக ரூ.45 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற்றிருக்கும் நிலையில், ரூ.1 லட்சம் கோடி ஊழல் எப்படி நடைபெறும்?
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், கிருஷ்ணசாமி போன்றவர்கள், தேர்தலில் போட்டியிட கூட்டணியில் ஒரு இடமாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, அரசின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து கருத்துகளைச் சொல்லும் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொள்கைகளை அவர்களது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழியும்போது நிச்சயமாக தமிழக அரசும், முதல்வரும் நல்ல முடிவை எடுப்பார்கள்.
தமிழகத்தில் மதுபானக் கடைகளை குறைக்கும் வகையில் 500 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், அறிவிப்பு வெளியிடாமலேயே 96 மதுபானக் கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன.
மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக, அந்த கடை எண்ணை குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 1,977 பேர் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.5.5கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் என் மீதுதொடுக்கப்பட்ட வழக்கை எதிர்கொள்ள நான் தயார். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.