

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க, செல்போனில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று திருமங்கலம் மெட்ரோரயில் நிலையத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தினார்.
பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ்-ஆப் செயலியில் 83000 86000 என்ற செல்போன் எண்ணுக்கு ஹாய் (hi) என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனடியாக, டிக்கெட் எடுப்பது தொடர்பாக எந்த மொழியில் தெரிந்துகொள்வது என்பதை (தமிழ்அல்லது ஆங்கிலம் மொழியை) தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பிறகு, புறப்படும் இடம், சேரும் இடம் தொடர்பாக நிலையங்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும். எத்தனை டிக்கெட் வேண்டும் என்று குறிப்பிட வேண்டும். இதன் பிறகு,வாட்ஸ்-அப் பே, ஜி பே, நெட்பேங்கிங் மூலமாகப் பணம் செலுத்திடிக்கெட் பெறலாம். டிக்கெட்டை எங்கிருந்து வேண்டுமென்றாலும்எடுத்துப் பயணிக்க முடியும்.
பின்னர் நிருபர்களிடம் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறியதாவது: சென்னை மெட்ரோரயில் பயணிகள் எண்ணிக்கைஉயர்ந்து வருகிறது. இருப்பினும், மக்கள் பயணிக்க வேண்டியஅளவை இன்னும் எட்டவில்லை. எனவே, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், `ஊக்கப்படுத்தும் டிக்கெட்' வழங்க உள்ளோம்.
இது மாணவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும். மெட்ரோ ரயில் நிலையம் அருகே 5 கி.மீ. தொலைவில் இருப்பவர்களை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஊக்கப்படுத்தும் விதமாக, 15 நாள் அல்லது ஒரு மாத தள்ளுபடி டிக்கெட், இலவச டிக்கெட் வழங்கி ஊக்கப்படுத்த உள்ளோம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில் தினசரி 1.80 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில்பயணித்த நிலையில் தற்போது 2.50 லட்சம் பேர் தினமும் பயணிக்கின்றனர். இதை மேலும் உயர்த்த,புதிய ரயில்களை வாங்க நடவடிக்கை எடுக்கிறோம். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய ரயில் வாங்கவும் நடவடிக்கை எடுக்கிறோம்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிட நெருக்கடியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம். இதுதவிர, இணைப்பு சேவையும் ஏற்படுத்தப்படுகிறது.
2028-ல் திட்டம் முடிவடையும்: சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் பகுதி வரும் 2025-ம் ஆண்டு இறுதி அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் முடியும்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வரும் 2028-ம் ஆண்டில் முழுமையாக முடியும். உயர்மட்டப் பாதை பணி வேகமாக நடைபெறுகிறது. சுரங்க நிலைய பணிக்கான டெண்டர் முடியும் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதை பணி தொடங்கி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுனன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.