Published : 18 May 2023 06:11 AM
Last Updated : 18 May 2023 06:11 AM
பூந்தமல்லி: சென்னை- போரூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் மிதிவண்டியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுடன் போலீஸார் தொடர்பு கொள்ளும் வகையில் ‘அக்கம்பக்கம் கண்காணிப்பு” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் இரவு எஸ்.ஆர்.எம்.சி. காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை- போரூர் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஆவடி காவல் இணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) விஜயகுமார் தலைமையில், துணை ஆணையர் பாஸ்கரன், எஸ்.ஆர்.எம்.சி. காவல் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் போலீஸார் மிதிவண்டியில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முதல், நேற்று அதிகாலை வரை நடந்த இந்த ரோந்துப் பணியில் ஐயப்பன்தாங்கல், போரூர், மவுண்ட்- பூந்தமல்லி சாலை, சக்தி நகர், செட்டி தெரு, குன்றத்தூர் சாலை, மதனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர்.
வங்கிகள், ஏடிஎம் மையங்கள், தங்கும் விடுதிகள், நகை கடைகள், அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் போலீஸாரின் பணிகள் குறித்தும் காவல் இணை ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மேலும், சாலைகளில் சென்ற கார், இரு சக்கர வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டன.
இந்த மிதிவண்டி ரோந்துப் பணியின்போது, காவல் இணை ஆணையர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘அக்கம் பக்கம் கண்காணிப்பு’ திட்டத்தின் கீழ், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள காவல் நிலையங்களின் எல்லைகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விரிவாக்கப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் மிதிவண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரோந்து பணியின்போது பெண்கள், மாணவ- மாணவிகள், தனியாக வசிக்கும் முதியோர் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளதால், பூட்டிய வீடுகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் என்பதால் தற்போது ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT