வள்ளலார் பல்லுயிர் காப்பக திட்டத்தில் 15 தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி

வள்ளலார் பல்லுயிர் காப்பக திட்டத்தில் 15 தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதி
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசு சார்பில் ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டத்தின் கீழ் 15 தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.1.14 கோடி வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2022-23 ஆண்டு பட்ஜெட்டில், அனைத்து உயிர்களையும் ஒப்பிட்டு பறைசாற்றி, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' எனும் புதிய திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த, தெருக்களில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி கடந்த ஜன.16-ம் தேதி முதல்கட்டமாக 5 அமைப்புசாரா தொண்டு நிறுவனங்களுக்கு முதல் தவணையாக ரூ.88 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

2-ம் கட்டமாக மீன்வளம், மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 15 அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.1.14 கோடியை நேற்று முன்தினம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை செயலர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in